Mastery of Consciouness Book in Tamil (Coming soon!)

MOC Front Book Final copy

Other Albums

MASTERY OF CONSCIOUSNESS BOOK IN TAMIL 

 

TamilMOC

 

 

அகவிழிப்பு மேம்பாடு

(Mastery of Consciousness: Awaken the Inner Prophet)

-நூல் அறிமுகம்

     தபஸ்யோகி நந்தி அவா்களால் எழுதப்பெற்றுள்ள “அகவிழிப்பு மேம்பாடு” (Mastery of Consciousness) என்னும் இந்நூல் பல அரிய ஆன்மீகப் புரிதல்களை உள்ளடக்கித் திகழ்கிறது. இந்நூல் ஐந்து பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. முதல்பகுதி நூல் அறிமுகம், தபஸ்யோகி நந்தியின் வாழ்க்கை வரலாறு, இந்நூல் எழக்காரணமாக அமைந்த மூன்று அறிவா்கள் (சாதுக்கள்) பற்றிய செய்திகள், அகவிழிப்பு சூத்திரங்களைப் பயன்படுத்தும் முறை மற்றும் சித்தர்களின் அகவிழிப்புக் கோட்பாடுகள் ஆகியனவற்றை உள்ளடக்கித் திகழ்கிறது.

     நந்தி அவா்கள் திருவண்ணாமலை சித்தர் யோகி அய்யா அவர்களுடைய பரிபூரண அருளைப்பெற்று, அவரால் முதன்முதலில் யோகியாக அடையாளங்காணப் பெற்றவர். திருநெல்வேலி மாவட்டம் குருக்குத்துறை ஆதிகுருநாதர் அருளைப் பெற்று, அவரால், “நீ நந்திநாதர்; பழமையான குரு. நீ மனிதனாகப் பிறந்தது எங்கள் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக. நாங்கள் உங்களுடன் இருக்கின்றோம். நீ நந்திநாதர் என்பதை அறிவாய்” என்று அவரது நிலை அவருக்கு உணர்த்தப்பட்டது.

      ‘குட்டி ஜப்பான்’ என்று பெருமையுடன் அழைக்கப்படும் சிவகாசி நகரில், தொழில்மேதை தெய்வத்திரு ப.அய்யநாடார் அவர்களின் பேரனாக, திரு.அ.சுபாஷ்சந்திரபோஸ் மற்றும் திருமதி காஞ்சனாபோஸ் ஆகியோரின் மகனாகப் பிறந்த நந்தி அவா்களுக்கு பெற்றோர் இட்ட பெயா் அதிபன் போஸ். நந்தியின் ஐந்தாவது வயதிலேயே அவரது ஆன்மீகப் பயணம் தொடங்கியது. தனது தந்தையின் தோளில் அமா்ந்து கொண்டு தென்னிந்தியாவின் புகழ்பெற்ற அய்யப்பன் கோவில் அமைந்துள்ள சபரிமலைக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்டதும், 40 கிலோமீட்டா் நடைபயணம் மேற்கொண்டபோது அடா்ந்த காட்டில், ஏற்பட்ட அதிசய, அபூர்வ அனுபவமும் தந்திக்கு தெய்வீக அனுபவத்தின் முதல்படியாக அமைந்தது.

     நந்தி அவர்கள் தனது பதினைந்தாவது வயதில் பள்ளியில் பயின்று கொண்டிருக்கும் பொழுதே ‘கடவுள்’ (God) என்ற தலைப்பில் ஒரு நூல் எழுத ஆரம்பித்து அறுபது பக்கங்கள் எழுதிய நிலையில் அம்முயற்சி தடைப்பட்டது. இதற்குமேல் எழுதுவதற்கு கடவுளுடனான நேரடி அனுபவம் வேண்டும் அல்லது கடவுளைக் கண்டடைய ஒரு வழிகாட்டி அல்லது குரு வேண்டும் என எண்ணினார். அந்நிலையில் அவரது வகுப்புத்தோழன் ஒருவனால் இங்கிலாந்தைச் சார்ந்த 60 வயது லீவிஸ் பார்க்கரின் அறிமுகம் கிடைத்தது. நந்தி அவருடன் அதிக அளவில் தத்துவார்த்தமான விசயங்கள் குறித்து கலந்துரையாடினார். அவரை தனது முதல் குருவாக நந்தி உணா்ந்தார்.

     லீவிஸ் பார்க்கரின் அழைப்பினுக்கிணங்க தனது எம்.பி.ஏ. படிப்பை இலண்டனில் மேற்கொண்ட நந்தி வார விடுமுறை நாட்களில் லீவிஸ் அவா்களைச் சந்தித்து பல ஆன்மீகப் புரிதல்களைப் பெற்றார். பிறகு தாயகமான இந்தியாவிற்குத் திரும்பிய நந்தி ஏற்றுமதி வணிகத்தில் ஈடுபட்டு பெரும் வளா்ச்சியடைந்தார். அந்தச் சூழலில் இந்தியாவில் அனைவரும் அறிந்த அரசியல் தலைவரின் குடும்பத்திலிருந்து பெண் வர, பெற்றோரின் விருப்பத்திற்கிணங்க திருமணம் செய்து கொண்டார். எந்நிலையிலும் தனது தொழிலுக்கும் அரசியலுக்கும் தொடர்பில்லாமல் பார்த்துக் கொண்டார் நந்தி. மிகக் குறுகிய காலத்தில், ஓராண்டிலேயே அவரது திருமண உறவு முறிந்தது. அதனோடு சேர்த்து தொழிலில் ஏற்பட்ட பெரும் வீழ்ச்சி, அவர் முதல் குருவாக ஏற்றுக் கொண்ட லீவிஸ் பார்க்கரின் தற்கொலை மரணம் ஆகியவை அவரை ஒருங்கே பாதித்தன. அடுத்து என்ன செய்வது என்று தெரியாத நிலையில் “இறைவா என்னைக் காப்பாற்று” என்று மட்டும் வேண்டிக் கெண்டிருந்தார். அப்பொழுது அவரது ஆழ் மனதில் இன்று நான் உன்னை அழைத்துச் செல்ல வருகிறேன்என்ற குரல் சத்தமாக ஒலித்தது. அன்று சூரியன் மறையும் நேரத்தில் இளம் வயதுடைய பைரவசேகர் சுவாமி தன்னை சிவன் அனுப்பியதாகவும், உன்னை உன் மரணத்திற்கு அப்பால் அழைத்துச் செல்லச் சொன்னார் எனவும் கூறித் தன்னுடன் அழைத்துச் சென்றார். காளகஸ்திக்கு அழைத்துச் சென்ற பைரவசேகரசுவாமி அங்குள்ள சிவனுக்கு இரவு முழுவதும் பல பூஜைகள் செய்தார். அப்பொழுது நந்தி தனக்குள் பெரும் மாறுதல் ஏற்படுவதை உணர்ந்தார். அவரது அகத்தில் நீலநிறச்சுடர் ஒளிவிட்டு, சிவன் அவருக்குள்ளே இருப்பதை உணர்ந்தார். அடுத்த நாள் காலை நந்தி ஒரு புதிய வாழ்க்கையை உணர்ந்தார். அவருக்குள்ளே பேரளவிலான ஆற்றல், பேரின்பம், மகிழ்ச்சி என இதுவரை அவர் உணர்ந்திராத உணர்வுகள் தோன்றின.

மூன்று அறிவர்களுடனான சந்திப்பு

     திருவண்ணாமலையில் அருணாச்சலேசுவரர் மலையிலுள்ள குகையில் சந்தித்த மூன்று அறிவர்கள் நந்தியின் ஆன்மீகப் பயணத்தில் மிக முக்கியத் திருப்பத்தை உண்டாக்கினார்கள். பல ஆண்டுகளாக எவருடனும் பேசாமல் இருந்த அவர்கள் நந்தியிடம் பேசினர். அவர்களுள் ஒருவரான வெள்ளிநிற தாடியையுடைய துறவி நந்தியிடம் உனக்குத் தேவையானவற்றைக்கேள் எனக்கூற, நந்தி தனக்கு வேண்டியது தாங்கள் பெற்றுள்ள ஆன்மீக அறிவுதான் என்றார். பல்வேறு வினாக்கள் வழி நந்தியை சோதித்து அறிந்த அந்தத் துறவி, “நாங்கள் நீ தெய்வத்தன்மை வாய்ந்த குழந்தை என்பதை அறிவோம் அதனால்தான் பல ஆண்டுகளாக கடைபிடித்த மௌனத்தைக் கலைத்தோம். இனி எங்கள் அறிவு அனைத்தும் உமது. உனது அகவிழிப்பில் எப்போதும் நாங்கள் உடனிருப்போம்” என்று கூறி நந்தியை நடுவில் உட்காரச்செய்து, அவர்கள் சுற்றிலும் அமர்ந்து கண்களை மூடி பல மணிநேரம் தியானித்தனர். கண்விழித்தபோது நந்தியின் மனதில் எந்தக் கேள்வியும் இல்லை. அவர் முழுமையை உணர்ந்திருந்தார். அவர்கள் “சைவம்வெற்றி” என்ற மந்திரத்தை நந்திக்கு உபதேசித்தனர். பிறகு அவர்கள் வழக்கமான ஆசீர்வாதத்தை வழங்கினர். அப்பொழுது அடுத்தக்கட்ட அகவிழிப்பு பெற்ற நந்தி தனது பிறப்புக்கான நோக்கத்தைப் புரிந்து கொண்டார்.

     அவரது இந்த வரலாற்றைத் தொடர்ந்து 108 அகவிழிப்பு சூத்திரங்களை எவ்வாறு படிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியப் பகுதிகளில் வாழ்ந்த சித்தர்கள் மரபுகுறித்தும், அவர்களது அகவிழிப்பு குறித்த கோட்பாடுகளையும் நந்தி அவர்கள் மிக விரிவாக விவரிக்கிறார்.

     இரண்டாவது பகுதி முழுவதும் 108 அகவிழிப்பு சூத்திரங்கள் ஒரு பக்கத்திற்கு ஒன்று என விவரிக்கப்படுகிறது. ஒவ்வொரு பக்கத்திலும் ஒருசூத்திரமும், அச்சூத்திரத்தோடு தொடர்புடைய ஒரு நிழற்படமும், அச்சூத்திரத்திற்கான விளக்கமும் இடம்பெற்றுள்ளன.

     மூன்றாவது பகுதியில் பல்வேறு ஆன்மீக இதழ்களில் நந்தி அவர்கள் எழுதிய அகவிழிப்பு, அகிம்சை, யோகாவின் பயன்கள் ஆகியன குறித்த கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

     நான்காவது பகுதி, பல்வேறு நிலைகளில் ஆன்மீகப் புரிதல் குறித்து நந்தி அவர்களிடம் கேட்கப்பட்ட வினாக்களுக்கு அவர் அளித்த விளக்கங்களின் தொகுப்பாக அமைந்துள்ளது.

     ஐந்தாவது பகுதியில், ஆன்மீகப் பயன்பாட்டுச் சொற்களுக்கான அர்த்தங்களும், நந்தி அவர்களின் ஆன்மீக உள்ளொளிப் பயணத்திற்கு குருவாக, வழிகாட்டிகளாக விளங்கிய அறிவர்கள் குறித்த செய்திகளும் இடம்பெற்றுள்ளன.

The Book is currently being translated! To be kept updated, please email us- vairamuthu@turiyanada.net